பேரனுடன் சேர்ந்து தமிழ் படிக்க போகிறேன்: ஐகோர்ட்டு புதிய நீதிபதி


பேரனுடன் சேர்ந்து தமிழ் படிக்க போகிறேன்: ஐகோர்ட்டு புதிய நீதிபதி
x
தினத்தந்தி 9 Oct 2021 7:23 PM GMT (Updated: 9 Oct 2021 7:23 PM GMT)

பழமையான கலாசாரத்தை கொண்ட தமிழ்நாட்டுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழ் ஆசிரியரை நியமித்து தன் பேரனுடன் தமிழ் படிக்கப் போகிறேன் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றுள்ள பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய் கூறினார்.

பதவி ஏற்பு
நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் 60 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. அதன்படி குஜராத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய், சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.பின்னர், நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாயை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பேசினார்.

தமிழ் படிக்கப் போகிறேன்
அதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய் பேசியதாவது:-

பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றது குறித்து பெருமைப்படுகிறேன். என் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன். தற்போது நான் தமிழகத்தின் குடிமகனாக ஆகியுள்ளேன். பழமையான கலாசாரத்தை கொண்ட தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நானும், எனது பேரனும் தமிழாசிரியர் ஒருவரை நியமித்து தமிழ் படிக்கப் போகிறோம்.

தள்ளுபடி செய்தது இல்லை
நான் 10 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்தாலும் இன்றும் மனதளவில் வக்கீலாகத்தான் உள்ளேன். விசாரணையின்போது வக்கீல் ஆஜராகவில்லை என்பதற்காக ஒரு வழக்கைக்கூட இதுவரை நான் தள்ளுபடி செய்ததில்லை. ஆனால், இதை வக்கீல்கள் யாரும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய், 1996-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட்டில் வக்கீல் பணியைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாகவும், 2013-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். தற்போது, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக அவர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து இங்கு நீதிபதிகள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.


Next Story