சூறைக்காற்றுடன் பலத்த மழை


சூறைக்காற்றுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 10 Oct 2021 7:48 PM GMT (Updated: 10 Oct 2021 7:48 PM GMT)

புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 3 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 3 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
பலத்த மழை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்   அறிவித்தது. புதுச் சேரியில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. மாலையில் மேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மாலை 4 மணிக்கு லேசான மழை சாரல் பெய்தது. தொடர்ந்து சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடற்கரை சாலை, புஸ்சி வீதி, இந்திராகாந்தி சிலை சதுக்கம், பூமியான்பேட்டை, பாவாணர் நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றன.
சூறை காற்றுடன் மழை பெய்ததால்   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை ஓய்ந்த பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
7.செ.மீ. பதிவானது
தொடர்மழையால் புதுச்சேரி காந்தி வீதி, திருவள்ளுவர் சாலை,  லாஸ்பேட்டை ஆகிய 3 இடங்களில் மரங்கள் முறிந்து    விழுந்தன.     இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். 
புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 7 செ.மீ. மழை பதிவானது. மாலை நேரத்தில் மழை பெய்ததால் புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வெளியே செல்ல முடியாமல் விடுதி அறைகளில் முடங்கி கிடந்தனர்.
திருக்கனூர்
திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5  மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. காற்றுடன் கூடிய மழையால் திருக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

Next Story