712 சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு; வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து


712 சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு; வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
x
தினத்தந்தி 10 Oct 2021 8:16 PM GMT (Updated: 10 Oct 2021 8:16 PM GMT)

கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்ட 712 சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் நேற்று நடந்தது. வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

சிவில் சர்வீசஸ் பதவிகள்

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 வகையான சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தகுதியுடையவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தவகையில் இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.அதன்படி இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் பதவி காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 712 பதவிகளுக்கு நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. அதில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத தகுதியானவர்களாக கருதப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக, இந்த தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

முதல்நிலை தேர்வு

அவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலை தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. மொத்தம் 73 நகரங்களில் 2 ஆயிரத்து 800 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 77 மையங்களில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், தமிழகத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் தேர்வை நேற்று சந்தித்ததாக கூறப்படுகிறது. முதல்நிலை தேர்வு 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொதுப்பாட தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடைபெற்றன. இதில் பொதுப்பாட தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 200 மதிப்பெண்ணும், திறனறிவு தேர்வில் 80 வினாக்கள் கேட்கப்பட்டு 200 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் 400 மதிப்பெண்ணுக்கு இத்தேர்வு நடைபெற்றது. கொரோனா தொற்றுக்கு இடையில் தேர்வு நடைபெற்றதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

வினாத்தாள் சற்று கடினம்

தேர்வு முடித்து வெளியே வந்த தேர்வர்களில் பெரும்பாலானோர் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாகவே கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, எதிர்பாராத சில வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாகவும், நடப்பு நிகழ்வுகளில் இருந்து குறைவான வினாக்களே வந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் பொதுப்பாட வினாத்தாளில் 13 வினாக்கள் அறிவியல் சார்ந்து இடம்பெற்று இருந்ததாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படித்தவர்களுக்கு அந்த வினாத்தாள் எளிதாக இருந்ததாகவும் கூறினர்.

அதேபோல் திறனறிவு தேர்வில் வாசித்து புரிந்து பதில் அளிக்கக்கூடிய வினாக்களுக்கு ஆங்கிலவழி கல்வியில் நன்கு படித்தவர்களாக இருந்தால் மட்டுமே அர்த்தம் அறிந்து பதில் அளிக்க முடியும் எனவும் கருத்துகளை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், 2011-ம் ஆண்டுக்கு பிறகு விளையாட்டு சம்பந்தமான வினாக்கள் இந்த முறை கேட்கப்பட்டு இருந்ததாகவும் கல்வியாளர்கள் சிலர் கருத்து கூறினர். முதல்நிலை தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள் அடுத்ததாக முதன்மை தேர்வை எதிர்கொள்வார்கள்.


Next Story