என்கவுன்டரில் கொள்ளையன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்


என்கவுன்டரில் கொள்ளையன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2021 10:43 AM GMT (Updated: 2021-10-11T16:21:46+05:30)

ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவன் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கசாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வயதான பெண்மணியின் கழுத்திலிருந்து 6 சவரன் தங்க நகையை இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் வழிப்பறி செய்து உள்ளனர். அப்பெண்மணி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த மர்மநபர்களை பிடிக்க விரட்டி சென்றுள்ளனர். தப்பி ஓட முயற்சித்த கொள்ளையர்கள், கையில் வைத்திருக்கும் துப்பாக்கியை கொண்டு பொதுமக்களை சுட முயற்சித்துள்ளார். துப்பாக்கியை கண்டதும் பொது மக்கள் பயந்து சிதறி ஓடினர்.

அதன்பிறகு சுங்கச்சாவடி அருகில் உள்ள ஏரி பகுதிக்குள் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பிச் சென்று பதுங்கி உள்ளனர். தகவலறிந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து, தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க சுமார் 5 மணி நேரமாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் கொள்ளையனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவர் ஜார்கண்ட்டை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் முர்தஸா என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில், என்கவுண்டர் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் பதுங்கியிருந்த 2-வது கொள்ளையர் நைம் அக்தர் கைது செய்யப்பட்டார். நைம் அக்தர் அளித்த தகவலின் அடிப்படையில் மற்றொரு கொள்ளையன் முர்தஷாவை போலீசார் தேடி வந்தனர். அந்த சமயத்தில்,  மேலூர் குப்பம் சாலையில் தப்பியோடிய முர்தஷாவை பிடிக்க தலைமைக் காவலர் மோகன் தாஸ் முயற்சித்தார். 

அப்போது,  துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸ் என்கவுண்ட்டரில் முர்தஷா பலியானார். உயிரிழந்த கொள்ளையன் முர்தஷா ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். கைதான மற்றொரு கொள்ளையன் நைம் அக்தரிடம் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த என்கவுண்டரின் போது போலீஸ் தரப்பில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

Next Story