புதுச்சேரியில் தனியார் பஸ்கள் ஓடவில்லை


புதுச்சேரியில் தனியார் பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 11 Oct 2021 7:42 PM GMT (Updated: 11 Oct 2021 7:42 PM GMT)

புதுவை மாநில தேர்தல் ஆணையரை கண்டித்து காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி சார்பில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டிருந்தன.

புதுவை மாநில தேர்தல் ஆணையரை கண்டித்து காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி சார்பில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டிருந்தன.
பஸ்கள் ஓடவில்லை
புதுவை மாநில உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் மாநில தேர்தல் ஆணையரை கண்டித்தும், வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதாகவும் கூறி காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி புதுவையில் நேற்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதையொட்டி அதிக அளவில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் ஒன்றுகூட இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதேநேரத்தில் ஆட்டோ, டெம்போ போன்றவை பெருமளவு இயக்கப்பட்டன. அவற்றிலும் ஏறி மக்கள் சென்றனர். கிராமப்புறங்களுக்கு செல்லும் தனியார் பஸ்கள் இயங்காததால்        அந்த பகுதியை   சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனங்களில்  வேலைக்கு வந்தனர்.
வெறிச்சோடிய பஸ் நிலையம்
புதுவை மக்களின் போக்கு வரத்து தேவையை தனியார் பஸ்கள் தான் பூர்த்தி செய்து வருகின்றன. அந்த வகையில் நேற்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக இந்த பஸ்கள் எதுவும் காலை முதல் மாலை வரை இயங்கவில்லை.
புதுச்சேரி அரசு பஸ்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. அந்த பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இல்லாததால் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பக்கத்தில் உள்ள பெரிய ஊர்களில் இருந்து வழக்கம் போல் பொதுமக்கள் வந்து செல்லவில்லை.
எனவே எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
மார்க்கெட்டுகள் மூடல்
இதன்காரணமாக புதுவை நகரப்பகுதியில் 2 சக்கர வாகனங்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. தொழிற்பேட்டைகள் குறைந்த அளவு தொழிலாளர்களுடன் இயங்கின.
முக்கிய வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்பட அனைத்து காய்கறி கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில இடங்களில் சிறிய பெட்டிக்கடைகள், தேனீர் மற்றும் மருந்து கடைகள் திறந்து இருந்தன.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. அரசுப் பள்ளிகள் திறந்திருந்தாலும் குறைந்த அளவிலேயே மாணவர்கள்  வந்திருந்தனர். 
சினிமா காட்சிகள் ரத்து
அதேபோல் வங்கிகள், அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன. தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.
அரசியல் கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர். டி.ஜி.பி. ஆனந்த மோகன் உத்தரவின் பேரில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வியாபாரிகள் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நேற்று  பகல் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள் மூடப்பட்டு தனியார் பஸ்கள் ஓடாததால் புதிய பஸ் நிலையம் மற்றும் முக்கிய கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 
மாலையில் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டு பஸ்களும் ஓடின.

Next Story