கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே மோதல்


கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே மோதல்
x
தினத்தந்தி 12 Oct 2021 7:33 PM GMT (Updated: 12 Oct 2021 7:33 PM GMT)

கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ேபாலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர், 
உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதில் 82.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு நடைபெற இருந்தது.
இதையொட்டி தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டு எண்.8-க்கு தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 8 சுற்றுகளாக வாக்குகள் எண்ண முடிவு செய்யப்பட்டு மேஜைகள் அமைக்கப்பட்டன. அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் வாக்கு எண்ணும் மேஜைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி இல்லை என கூறினர்.
வாக்குவாதம்
இதேபோல் தங்களுக்கு வழங்கப்பட்ட அட்டவணைப்படி தான் மேஜைகள் அமைக்க வேண்டும் என தி.மு.க.வினரும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதம் ஆனது.
இதையடுத்து, இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 8 ஊராட்சிகள் வாரியாக வாக்கு எண்ணப்படும் என தெரிவித்தனர். அதன்பிறகு வாக்கு எண்ணும் பணி சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு காலை 9 மணியளவில் தொடங்கியது.
தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே மோதல்
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு வாக்குச்சீட்டில் கைரேகை வைக்கப்பட்டு இருந்ததால், அந்த வாக்குச்சீட்டினை சந்தேக வாக்கு என வைக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.
இதேபோல் மற்றொரு வாக்குச்சீட்டில் மை அழிந்ததால் அந்த வாக்குச்சீட்டினை சந்தேகத்தில் வைக்க வேண்டும் என தி.மு.க.வினர் தெரிவித்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் குவிப்பு
இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தேர்தல் அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்றது.
வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story