மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது

திருக்கனூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று கைது செய்தனர்.
திருக்கனூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
திருக்கனூர் அருகே உள்ள கொ.மணவெளி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவா (வயது 51). பொதுப் பணித்துறை ஊழியர். இவர் திருக்கனூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பினார். பின்னர் மோட்டார் சைக்கிளை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் சாவி அப்படியே இருந்தது.
அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதில் இருந்து இறங்கிய ஒருவர், திடீரென்று சிவாவின் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார். அவருடன் வந்த மற்ற 2 பேரும், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் கிளப்பிக்கொண்டு தப்பிச்சென்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவா, திருடன் திருடன்... என்று கூச்சலிட்டார். இதை கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தும், அவர்களை பிடிக்க முடியவில்லை.
5 கிலோ மீட்டர் துரத்தி பிடித்தனர்
இதுகுறித்து திருக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் தங்கள் இருசக்கர வாகனங்களில், திருட்டு ஆசாமிகளை துரத்திச் சென்றனர்.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று தமிழக பகுதியான ராதாபுரம் அருகே 3 பேரையும் போலீசார் மடக்கினர். அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் விழுப்புரம் விராட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (36), சுந்தர் (35), ஈச்சங்காடு எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்த முரளி (41) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story