குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 16 Oct 2021 1:06 PM GMT (Updated: 16 Oct 2021 1:06 PM GMT)

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது

இன்று காலையில் இருந்தே மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னர் காலை 9-30 மணி முதல் பலத்த மழை பெய்தது இந்த மழை காலை 11 மணி வரை நீடித்தது. அதன்பிறகும் மழை தூறிக்கொண்டே இருந்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாறு கால்கள் நிரம்பி அந்த தண்ணீரும் சாலையில் ஓடியது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில்  காலை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவை தாண்டி சீறிப்பாய்ந்து கொட்டியது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அருவிக்கு நடந்து செல்லும் படிகளை தாண்டி விழுந்தது. 

ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. அருவிகளை பார்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். அப்போது இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தில் இருந்து மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வார்கள்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் தொலைவிலிருந்தே அருவிகளை பார்த்து செல்கின்றனர்.

Next Story