கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு; பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு


கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு; பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2021 4:31 PM GMT (Updated: 17 Oct 2021 4:31 PM GMT)

கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழையை முன்னிட்டு கடந்த 15 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.  எனினும், கடந்த 14ந்தேதி இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மழைநீர் நிரம்பி வெள்ள காடாக உள்ளது.  கன்னியாகுமரியின் நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.71 அடியாக உயர்ந்து உள்ளது.

பேச்சிப்பாறை, குற்றியாறு, கடையாலுமூடு, களியல் உட்பட குமரி மலை கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.  மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

மழையால் தோவாளை பகுதியில் இறுதிக்கட்ட அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.  குமரி மாவட்டத்தில் மழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட ஒருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இதனால், அங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதனை கன்னியாகுமரி ஆட்சியர் அரவிந்த் அறிவித்து உள்ளார்.


Next Story