நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டமானது 3 பேர் கவலைக்கிடம்


நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டமானது 3 பேர் கவலைக்கிடம்
x
தினத்தந்தி 17 Oct 2021 8:08 PM GMT (Updated: 2021-10-18T01:38:41+05:30)

திருவண்ணாமலை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டமானது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகில் உள்ள இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த லியோபெலிக்ஸ் (வயது 25), அலெக்சாண்டர் (23). இவர்களின் உறவினர் ஜான்போஸ்கோ ((35). 3 பேரும் அமிர்தராஜுக்கு சொந்தமான தகர கொட்டகை வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் வீட்டில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறின. வீட்டின் சுவர், மேற்கூரை ஆகியவை இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 3 பேரும் படுகாயம் அடைந்து தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை நடத்தி வருகிறோம்

தச்சம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் வனப்பகுதிகள் இருப்பதால், அதில் உள்ள மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அப்பகுதிகளில் வசிப்போர் நாட்டு வெடி குண்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

படுகாயம் அடைந்த 3 பேரும் நாட்டு வெடி மருந்தைப் பயன்படுத்தியதால் வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டு இருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story