என் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்? - விஜயபாஸ்கர் விளக்கம்


என் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்? - விஜயபாஸ்கர் விளக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2021 3:29 PM GMT (Updated: 18 Oct 2021 3:29 PM GMT)

வருமான வரித் துறையினர் எனது இல்லத்தில் எந்த ஆவணங்களையும் பறிமுதல் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரிகள், கல் குவாரி உள்ளிட்ட 28 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் 20 துணைக் கண்காணிப்பாளர்களின் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் 30 குழுக்களாகப் பிரிந்து  சோதனை நடத்தினர்.

இதில் ரூ.23.82 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள், வன்வட்டுகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், வருமானவரி சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

எனது வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. பொதுவாழ்க்கையில் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து வருகிறேன்.

மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. அதிமுகவிற்கு சோதனை என்பது புதிதல்ல. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றார். 

மேலும் பொது வாழ்க்கையில் பயணிக்கும் நபர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவது வழக்கம் தான் என்றும் இதைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story