வேறொரு வாலிபருடன் காதல்; இளம்பெண்ணை பெற்றோரே கொன்றது அம்பலம்


வேறொரு வாலிபருடன் காதல்; இளம்பெண்ணை பெற்றோரே கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 19 Oct 2021 5:57 AM GMT (Updated: 19 Oct 2021 5:57 AM GMT)

பரமக்குடி அருகே இளம்பெண் மர்ம சாவு வழக்கில் திருப்பம் ஏற்பட்டு, பெற்றோரே அவரை கொன்றது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்றும் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், தென்னரசு. இவருடைய மகள் கவுசல்யா (வயது23).

இவருக்கும் செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் கணவன், மனைவி இடைேய ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கவுசல்யா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 16-ந் தேதி வீட்டில் கவுசல்யா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே அவருடைய பெற்றோர் கவுசல்யாவை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 2 நாட்களுக்குப்பின் ஆஸ்பத்திரியில் இருந்து யாருக்கும் தெரியாமல் கவுசல்யா தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக்கூறி கவுசல்யா உடலை போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்காமல் எரித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், கிராம நிர்வாக அதிகாரி ஹேமாவுக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து ஹேமா எமனேசுவரம் போலீசில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் கவுசல்யாவின் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடந்த 2 தினங்களாக இப்பிரச்சினை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அதைத்தொடர்ந்து பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில், சம்பவத்தன்று கவுசல்யாவுக்கும், அவருடைய பெற்றோருக்கும் தகராறு நடந்துள்ளது. அப்போது தாக்கப்பட்டதில் கவுசல்யா இறந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, கவுசல்யாவின் தந்தை தென்னரசு (58), தாயார் அமிர்தவள்ளி (48) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், கணவரைவிட்டு பிரிந்து வாழ்ந்த கவுசல்யா, திருமணம் ஆகாத ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் ஊர் சுற்றியதாகவும், அந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால் நடந்த தகராறில் கவுசல்யா கொல்லப்பட்டதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.

மேலும் போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்ததில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்றும் தீவிர விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story