மதிமுகவை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்வது எனது கடமை - துரை வைகோ பேட்டி


மதிமுகவை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்வது எனது கடமை  - துரை வைகோ பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2021 12:28 PM GMT (Updated: 21 Oct 2021 1:09 PM GMT)

கட்சியில் நம்மால் எவ்வாறு பணியாற்ற முடியும் என்று பல முறை யோசித்துள்ளேன். மதிமுகவுக்காக இந்த முடிவு எடுத்துள்ளேன் என துரை வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க-வின் தலைமை நிலையச் செயலாளராக புதிதாகத் தேர்வான துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று ம.தி.மு.க தலைமை எனக்குத் தலைமைக் கழகச் செயலாளர் என்ற பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. 106 பேரிடம் நடத்திய வாக்கெடுப்பில் 104 பேர் `வேண்டும்' என்றும் இரண்டு பேர் `வேண்டாம்' என்றும் வாக்களித்திருக்கின்றனர். இவ்வளவு பேர் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற மனச்சுமை என்னிடம் இருக்கிறது.

எனக்கு வாக்களிக்காத இருவரும், 'தம்பிக்கு நாம் வாக்களிக்க வில்லையே' என்று வருத்தப்படும் அளவுக்கு என்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு மலையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டது போன்ற சுமையாகவும் சவால் நிறைந்த பயணமாகவும் உணர்கிறேன்.

தலைவர் வைகோவைப்போல செயலாற்றல், சொல்லாற்றல் எனக்குக் கிடையாது. ஆனாலும் என்மீது தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் என்னால் முடிந்த வரை உழைக்கத் தயார். 6 சதவிகிதமாக இருந்த ம.தி.மு.க-வின் வாக்கு வங்கியில் கடந்த சில வருடங்களாக சிறிய தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அதைச் சரிசெய்து முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும். அதற்காக நான் கடமையாற்றுவேன்.

எங்கள் கட்சியின் பலம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த சில வருடங்களாக கட்சியில் சிறிய தொய்வு ஏற்பட்டிருந்தது. அந்தத் தொய்வைச் சரிசெய்வது தான் என் முதல் இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story