கரூரில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தல் திடீர் ஒத்திவைப்பு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 50 பேர் கைது


கரூரில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தல் திடீர் ஒத்திவைப்பு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 50 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 6:55 PM GMT (Updated: 22 Oct 2021 6:55 PM GMT)

கரூரில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் அதிகாரியின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,
உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 9 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 3 பேரும் ஊராட்சி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணதாசனும், துணைத்தலைவராக தானேஷ் என்கிற முத்துக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கிடையே சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக துணைத்தலைவராக இருந்த தானேஷ் என்கிற முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தேர்தலில் முத்துக்குமார் தோல்வி அடைந்தார்.
தி.மு.க. வெற்றி
இதனைதொடர்ந்து பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வார்டு எண்.8-க்கான மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மீண்டும் முத்துக்குமாரும், தி.மு.க. சார்பில் கண்ணையனும் போட்டியிட்டனர். 
இதில் தி.மு.க.வை சேர்ந்த கண்ணையன் வெற்றி பெற்றார். இதையடுத்து மாவட்ட ஊராட்சியில் அ.தி.மு.க.வின் எண்ணிக்கை 9-ல் இருந்து 8-ஆக குறைந்தும், தி.மு.க.வின் எண்ணிக்கை 3-ல் இருந்து 4-ஆக அதிகரித்தும் இருந்தன.
தேர்தல் ஒத்திவைப்பு
இந்தநிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கு நேற்று மறைமுக தேர்தல் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. பின்னர் மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மதியம் 2.15 மணியளவில் தேர்தல் நடைபெறும் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்திற்குள் சென்றனர். மேலும் அவர்கள் செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனையடுத்து 2.30 மணியளவில் மறைமுக தேர்தல் பணிகள் நடைபெற்றது. பிற்பகல் 2.50 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரி மந்திராச்சலம் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறி சென்றார். அப்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளியே வந்தவுடன் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதிகாரி கார் முற்றுகை
இதையடுத்து அங்கு கூடியிருந்த அ.தி.மு.க.வினர் தேர்தல் நடத்தும் அதிகாரி சென்ற காரை வழிமறித்தனர். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், தேர்தல் ஒத்தி வைத்ததற்கான காரணத்தை கேட்டு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அதிகாரி அமர்ந்து இருந்த காரின் முன்பகுதியில் கைகளால் தட்டினர். இதனைதொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அ.தி.மு.க.வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
தொடர்ந்து அ.தி.மு.க.வினரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க.வினர் 12 கவுன்சிலர்கள் வந்துள்ளனர் என்றும், எதற்காக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை கூற வேண்டும் என்றும், காரணத்தை சொல்லாமல் அவரை விடமாட்டோம் என்று கூறி தொடர்ந்து காரின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் மினிட் புத்தகத்தில் கையெழுத்திட்டு உள்ளனர் என்றும், எனவே தேர்தலை ஒத்திவைக்க கூடாது என்றும் தொடர்ந்து காரை முற்றுகையிட்டனர்.
அ.தி.மு.க.வினர் கைது
இதனையடுத்து அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அ.தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் போலீசார் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், 18 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 50 பேரை கைது செய்து குண்டு கட்டாக தூக்கி போலீஸ் பஸ்சில் ஏற்றினர். பின்னர் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story