மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் நடத்த வேண்டும் -முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


எம்.ஆர்.விஜயபாஸ்கர்
x
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தினத்தந்தி 22 Oct 2021 7:15 PM GMT (Updated: 22 Oct 2021 7:15 PM GMT)

ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர், 
தேர்தல் ஒத்தி வைப்பு
கரூரில் மாவட்ட ஊராட்சிக்குழு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பது குறித்து முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
தேர்தல் நடத்தும் அதிகாரி 12 கவுன்சிலர்களிடமும் மினிட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறி காரில் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவரது காரை தடுத்து நிறுத்தினோம். பின்னர் ஏன் தேர்தலை நிறுத்தியுள்ளீர்கள் என தகவல் சொல்லுங்கள் என கேட்டோம். ஆனால் அவர் காரை விட்டு இறங்காமல் உள்ளேயே இருந்தார்.
வழக்கு தொடர முடிவு
எங்களது கவுன்சிலர்கள் மினிட் புத்தகத்தில் கையெழுத்து போட்டோம் என்று கூறினர். இதனால் மினிட்டில் கையெழுத்து போட்ட பேப்பரை எடுத்து தர கூறினோம். அதற்கு அதிகாரி முடியாது என்றார். மினிட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விண்ணப்ப படிவத்தை வாங்கி கொண்டு தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்க சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு. அதற்காகத்தான் அதிகாரி வெளியே சென்றார்.
12 கவுன்சிலர்களும் வந்தபிறகு ஏன் தேர்தலை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டால், சொல்ல மறுக்கிறார்கள். இதுதான் நேர்மையாக தேர்தல் நடத்துவதா? அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. நாளைக்கு நீதிமன்றத்தை நாடி நீதிமன்றத்தின் மூலமாக எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். நிச்சயமாக ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நாளை மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story