காரைக்குடி அருகே துணிகரம்: ஆவின் தலைவர் வீட்டில் ரூ.4 லட்சம் கொள்ளை; காரும் எரிப்பு


காரைக்குடி அருகே துணிகரம்: ஆவின் தலைவர் வீட்டில் ரூ.4 லட்சம் கொள்ளை; காரும் எரிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 6:40 AM GMT (Updated: 2021-10-23T12:10:12+05:30)

காரைக்குடி அருகே ஆவின் தலைவர் வீட்டில் ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு காரையும் எரித்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லுவயலை சேர்ந்தவர் கே.ஆர்.அசோகன். இவர் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆவார். காரைக்குடி ஆவின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் குடும்பத்தோடு தேவகோட்டையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். சொந்த ஊரான கல்லுவயலில் இவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. அவ்வப்போது அங்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று மாலை அங்கு சென்ற அசோகன், கட்சி மற்றும் ஊர்பிரமுகர்களை சந்தித்து விட்டு தேவகோட்டை திரும்பி விட்டார். கல்லுவயலில் அவரது பங்களா முன்பு கார் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்தபகுதியில் பலத்த சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்தனர்.

அப்ேபாது அசோகன் பங்களா போர்டிகோவில் நிறுத்தப்பட்டு இருந்த கார் எரிந்து கொண்டு இருந்தது. அதன் டயர் வெடித்ததால் பலத்த சத்தம் வந்துள்ளதை அக்கம்பக்கத்தினர் அறிந்தனர். உடனடியாக தீயை அணைத்தனர்.

மேலும் தாழ்ப்பாள்களும் உடைக்கப்பட்டு, பங்களா கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அசோகனுக்கும் போலீசாருக்கும் தகவல் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு வந்த அசோகன், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் வீடெங்கும் சிதறி கிடந்ததை அறிந்தார். பின்வாசல் கதவும் திறந்து கிடந்தது.

பீரோவில் வைத்திருந்த ரூ.4 லட்சம், 50 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதும் தெரியவந்தது.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், காரைக்குடி துணை சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு, 3 தெருக்களையே சுற்றிச்சுற்றி வந்தது. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

ஆவின் தலைவர் வீட்டில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்தவர்கள், வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரின் டீசல் டேங்க் மூடியை உடைத்து காருக்கு தீவைத்துள்ளனர். இதில் கார் எரிந்து பலத்த சேதம் அடைந்துள்ளது.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள்,, தொண்டர்கள் அங்கு திரண்டனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Next Story