கட்டுமானப்பொருட்கள் விலையை குறைக்க தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை


கட்டுமானப்பொருட்கள் விலையை குறைக்க தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2021 7:00 AM GMT (Updated: 2021-10-23T12:30:29+05:30)

கட்டுமானப்பொருட்கள் விலையை குறைக்க தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 "திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை சுமாராக எவ்வளவு உயர்ந்துள்ளது என்றும் ஊடகங்களில் , செய்தித்தாள்களிலும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்பதற்கு ஏற்ப ஒரு லிட்டர் 60 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இவ்வாறு கட்டுமான பணிகளுக்கு தேவையான பணிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலைகள் இப்படித் தாறுமாறாக உயர்ந்து இருப்பதால் கொரோனாவால் ஒரு வருடத்திற்கு முன்னதாக நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான பணிகளை மேற்கொண்டு தொடர முடியாமல் உரிமையாளர்களும், ஒப்பந்ததாரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிமெண்ட் விலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தலைநகர் டெல்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 350, ஆந்திராவில் 370 ,தெலுங்கானாவில் 360 ,கர்நாடகாவில் 380 என்று உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை ஒரு மூட்டை 480 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . மற்ற கட்டுமான பொருட்களின் விலைகளும் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் 30 சதவீதம் வரை குறைவாகவே உள்ளன.

ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்களின் வாழ்நாள் சாதனையாக கருதுவது சொந்தமாக வீடு கட்டி வசித்து தான். ஆனால் அவர்களின் சொந்த வீடு என்ற எண்ணம் தற்போது வெறும் கானல் நீராகப் போகும் கூடிய அளவில் கட்டுமானப் பொருட்களின் விலை விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாத காலத்திற்குள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சொந்தமாக வீடு கட்டுவது மட்டுமல்ல வீடுகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும், சிறு ,சிறு ரிப்பேர் போன்றவைகளில் மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

கட்டுமானத் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள கொத்தனார்கள், ஆண் ,பெண் வேலையாட்கள் ,தச்சு வேலை செய்பவர்கள் என்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள், கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் ,சரக்கு வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் , செங்கல் தயாரிப்பாளர்கள் போன்ற ஆயிரக்கணக்கான கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்த விலைவாசி உயர்வோடு டீசல் விலை உயர்வினால் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் லாரி வாடகை உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்தபடி விடியா அரசு இன்னும் விலை குறைப்பை நிறைவேற்றவில்லை.

தேர்தல் சமயத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளின் படி சிமெண்ட் ,கம்பி, செங்கல், மணல் மற்றும் மரம் போன்ற முக்கியமான கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் இணைத்து பொது மக்களுக்கு நியாயமான விலையில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story