தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி தொடக்கம் கவர்னர், முதல்-அமைச்சர் திறந்து வைத்தனர்


தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி தொடக்கம் கவர்னர், முதல்-அமைச்சர் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 24 Oct 2021 6:10 PM GMT (Updated: 2021-10-24T23:40:18+05:30)

புதுவை அரசின் பாப்ஸ்கோ சார்பில், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

புதுச்சேரி
புதுவை அரசின் பாப்ஸ்கோ சார்பில், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

தீபாவளி சிறப்பு அங்காடி

புதுவை அரசின் பாப்ஸ்கோ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படும்.  ஆனால் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படவில்லை.
இதற்கிடையே இந்த ஆண்டு தீபாவளி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக புதுவை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அங்காடி அமைக்கப்பட்டது.
இதன் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன்வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் அங்காடியை தொடங்கி வைத்தனர். 
நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., அரசு செயலர் உதயகுமார், பாப்ஸ்கோ மேலாண் இயக்குனர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மலிவு விலை

இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியில் மலிவு விலையில் அனைத்து மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகளும் விற்பனைக்கு கிடைக்கிறது. கொரோனாவால் பொருளாதார பாதிப்பில் இருந்து வரும் மக்களுக்கு இந்த அங்காடி மிகுந்த பலனுள்ளதாக இருக்கும். பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும் என்றார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
புதுவை அரசு 3 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி சிறப்பு அங்காடியை திறந்துள்ளது. தீபாவளி சமயத்தில் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்காடி திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கும். கொரோனா காலத்தில் தொழில்கள் பாதிக்கப்பட்டு, மக்கள் பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உதவும் வகையில் புதுவை அரசு இந்த மலிவு விலை விற்பனை அங்காடியை திறந்துள்ளது.
குறிப்பாக, 1,500-க்கு பொருட்கள் வாங்கினால் ரூ.552 மானியமாக கிடைக்கும். நலிவடைந்து மூடப்பட்டு விடும் என்ற நிலையிலிருந்த பாப்ஸ்கோ நிறுவனத்தை புதுப்பிக்கும் வகையில் தீபாவளி சிறப்பங்காடி திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாப்ஸ்கோ நிறுவனம் புத்துயிர் பெறும். அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக ஊதியமின்றி பணியாற்றுவோருக்கு 2 மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
------

Next Story