தமிழகத்தில் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் - தமிழக அரசு தகவல்


தமிழகத்தில் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் - தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 24 Oct 2021 9:38 PM GMT (Updated: 24 Oct 2021 9:38 PM GMT)

தமிழகத்தில் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் கோமாரி நோய்த்தடுப்பு மருந்து 100 சதவீத மானியத்தில் இலவசமாக ஒன்றிய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் இருமுறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தடுப்பூசி போடப்படுகிறது. 

தற்போது, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 100 சதவீதம் கோமாரி நோய்க்கான தடுப்பூசிப்பணி நிறைவடைந்துள்ளது. மேலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களான தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கோமாரி நோய் அதிகம் தாக்கம் ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் அளவில் கோமாரி தடுப்பூசி கால்நடைகளுக்கு போடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும் கோமாரி தடுப்பூசி மருந்து பெற்று வழங்க தமிழக அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் கோமாரி தடுப்பு மருந்து மத்திய அரசு மூலம் பெறப்பட்டு கோமாரி நோய்த்தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story