வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதன்படி வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் நேற்று மதியம் புறநகர் பகுதிகளிலும், சென்னையில் சில இடங்களிலும் பலத்த இடியுடன் மழை பெய்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும். ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பிற மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யும்.
குறிப்பாக சென்னை முதல் தொண்டி வரையிலான கடலோரப்பகுதியில் இன்று மாலை 4 மணி முதல் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வட கிழக்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக நாளை பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழையும் நாளை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story