100 நாளில் ஆயிரம் கி.மீ. தூரம் ஓடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்


100 நாளில் ஆயிரம் கி.மீ. தூரம் ஓடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

தங்களின் மீது நான் அக்கறை கொள்ளும் தேசிய தினத்தையொட்டி 100 நாளில் 1,000 கி.மீ. தூரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓடுகிறார். வேலூரில் 15.3 கி.மீ. தூரம் ஓடி நேற்று அவர் தொடங்கினார்.

மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றவர் மா.சுப்பிரமணியன். அவர், கொரோனா என்ற கொடிய அரக்கனை தமிழகத்தில் இருந்து ஒழித்துக்கட்டி விட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

விழிப்புணர்வு நடவடிக்கைகள், அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள், தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துதல் என தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக மக்கள் கொரோனாவின் பிடியில் ஒரு போதும் சிக்கி விடக்கூடாது என்று கடிகார முள் போன்று ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவர், தன்னுடைய உடல்நலனுக்காகவும் ஓடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

100 நாட்களில் ஆயிரம் கி.மீ. ஓட்டம்

அந்தவகையில், ‘தங்களின் மீது நான் அக்கறை கொள்ளும் தேசிய தினம்' நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ‘100 நாட்களில் ஆயிரம் கி.மீ. தூரம் ஓடுவது' என்று மா.சுப்பிரமணியன் தீர்மானித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 10 கி.மீ. வீதம் ஓடி, 100 நாட்களில் அந்த இலக்கை எட்டிப் பிடிக்க முடிவெடுத்துள்ளார்.

டீக்கடையில் விழிப்புணர்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிக்காக வேலூர் மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற மா.சுப்பிரமணியன், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் நேற்று தனது ஓட்டத்தை தொடங்கினார். முதல் நாளன்று 15.3 கி.மீ. தூரம் ஓடினார். அப்போது, சாலையோரம் உள்ள டீக்கடை ஒன்றில் அமர்ந்து மா.சுப்பிரமணியன் டீ குடித்தார்.

பின்னர் அந்த டீக்கடையில் இருந்தவர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? என்று கேட்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை பாராட்டிய அவர், தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் கொரோனா தொற்றாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்? என்பது குறித்தும் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story