மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை


மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 26 Oct 2021 6:04 PM GMT (Updated: 2021-10-26T23:34:30+05:30)

செல்போனில் நண்பர்களுடன் பேசியதால் நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி
செல்போனில் நண்பர்களுடன் பேசியதால் நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

காதல் திருமணம்

கடலுார் மாவட்டம் சின்ன பகண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய சுகர் (வயது 38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பணியாற்றியபோது, தன்னுடன் பணியாற்றிய மும்பையை சேர்ந்த ஜெர்சி பிரின்ஸ்லா (31) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு புதுச்சேரி தர்மாபுரி தனகோடி நகர் முதல் குறுக்கு தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஜெயசுகர் தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். வீட்டில் இருந்த ஜெர்சி பிரின்ஸ்லா தனது நண்பர்களுடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் அவரது நடத்தையில் ஜெயசுகர் சந்தேகப்பட்டார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
விசாரணை
இந்த நிலையில் 3.12.2015 அன்று ஏற்பட்ட தகராறில் மனைவியை ஜெயசுகர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இது தொடர்பாக புதுச்சேரி மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடலூர் நத்தவேளியை சேர்ந்த ராமு என்கிற ராமமூர்த்தி (24), கடலூர் வண்டிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து என்கிற முத்துராஜ் (38) ஆகியோர் ஜெர்சி பிரின்ஸ்லா கொலையை மறைக்க உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஜெயசுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 2-வது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ஆயுள் தண்டனை

ஜெர்சி பிரின்ஸ்லாவை கொலை செய்த குற்றத்திற்காக அவரது கணவர் ஜெய சுகருக்கு ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்தை மறைக்க உதவிய அவரது நண்பர்கள் ராமு, முத்து ஆகிய 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகினார்.

Next Story