திண்டிவனம் கொலை வழக்கு - கணவன், மனைவிக்கு தூக்கு தண்டனை: சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


திண்டிவனம் கொலை வழக்கு - கணவன், மனைவிக்கு தூக்கு தண்டனை: சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 8:12 PM GMT (Updated: 26 Oct 2021 8:12 PM GMT)

திண்டிவனத்தில் சொத்துக்காக பெற்றோரையும், தம்பியையும் பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்த அ.தி.மு.க. பிரமுகருக்கும், அவரது மனைவிக்கும் தூக்கு தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 2019-ம் ஆண்டு ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியது.

தமிழகத்தில் அதிர்வலை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. பிரமுகர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், காவேரிப்பாக்கம், சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 60), வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி கலைச்செல்வி (52).இவர்களது மகன்கள் கோவர்த்தனன் (30), கவுதம் (27). இதில் கோவர்த்தனன் அ.தி.மு.க. திண்டிவனம் நகர மாணவர் அணி தலைவராகவும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். கவுதம் தனது தாய் கலைச்செல்வியுடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கோவர்த்தனனின் மனைவி தீபகாயத்ரி (24). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

வீட்டில் இறந்து கிடந்தனர்
இந்தநிலையில் கடந்த 15.5.2019 அன்று அதிகாலை கலைச்செல்வியும், கவுதமும் ஒரு அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.ராஜி வீட்டின் வராண்டாவில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது. ஒரே வீட்டில் பெற்றோரும், அவர்களது மகனும் மர்மமாக இறந்தது அந்த சமயத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.சி. எந்திரம் வெடித்ததாக நாடகம்
இது தொடர்பாக கோவர்த்தனனிடம் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தானும், தனது மனைவியும் வேறொரு அறையில் படுத்து தூங்கியதாகவும், மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால் சம்பவம் நடந்த அறையில் கிடந்த உடைந்த பாட்டில்களின் துகள்கள், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் இருந்த பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜியின் உடலில் கத்தி வெட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 3 பேரும் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து கோவர்த்தனனை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் 3 பேரையும் கொலை செய்துவிட்டு ஏ.சி. எந்திரம் வெடித்து இறந்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி தீபகாயத்ரியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டு வீசி கொலை

சம்பவம் நடந்த அன்று அதிகாலை ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த அறையில் பெட்ரோல் குண்டுகளை கோவர்த்தனன் வீசியுள்ளார். அந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததால் அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் கலைச்செல்வியும், கவுதமும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

ராஜி மட்டும் பின்பக்க கதவு வழியாக வெளியே வந்து அலறி துடித்துள்ளார். உடனே அவரை கோவர்த்தனன் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர் ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பெற்றோர் மற்றும் தம்பி இறந்து விட்டதாகவும் இருவரும் நாடகமாடியுள்ளனர்.

சொத்து பிரச்சினை

கோவர்த்தனன் தொழில் தொடங்க தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் கலைச்செல்வி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதுதவிர தனக்கு மட்டும் எளிமையாக திருமணம் நடத்தி விட்டு தம்பிக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்ததும் அவருக்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.

மேலும் கவுதமுக்குதான் அதிக சொத்து கொடுக்கப்போவதாக பெற்றோர் கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோரால் எந்த பயனும் இல்லை என எண்ணி தாய், தந்தை, தம்பி ஆகியோரை திட்டமிட்டு தீா்த்து கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பூந்தமல்லி கோர்ட்டில் விசாரணை

பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொலை செய்யப்பட்டதால் இந்த வழக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். முன்னதாக நேற்று காலை கோவர்த்தனன், தீபகாயத்ரி ஆகியோர் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜரானார்கள். அப்போது இருவரும் குற்றவாளிகள் எனவும், தண்டனை விவரம் மாலை அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வேல்முருகன் நேற்று மாலை வழக்கின் தீர்ப்பு விவரத்தை அறிவித்தார்.

நீதிபதி அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

தூக்கு தண்டனை

கொலை குற்றம் 2 பேர் மீதும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 4 தூக்கு தண்டனையும், தலா 2 ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

நீதிபதியின் இந்த பரபரப்பு தீர்ப்பை கேட்டதும் கோவர்த்தனனும், அவரது மனைவி தீபகாயத்ரியும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் விஜயராஜ் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் 19 சாட்சிகள், 35 ஆவணங்கள், 17 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story