சாப்பிடாத சமோசாவுக்கு பணம் கேட்டதால் ஓட்டல் உரிமையாளர் கொலை...!

மதுரை புதூர் பகுதியில் சாப்பிடாத சமோசாவுக்கு பணம் கேட்டதால் ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த விறகு வெட்டும் தொழிலாளி சரண் அடைய சென்றபோது கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). இவர் புதூர் ஐ.டி.ஐ. எதிரே ஓட்டல் வைத்திருக்கும் முத்து என்பவருடன் பங்குதாரராக சேர்ந்து ஓட்டல் தொழிலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் ஓட்டலில் முத்துக்குமார் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஓட்டலுக்குள் கொலைசெய்யப் பட்டு கிடந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவிட்டார். அதன்பேரில் வடக்கு போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன், துரைப்பாண்டியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் குற்றவாளிகளை தேடி வந்த போது புதூரை சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் சரணடைய சென்றபோது பிடித்து விசாரித்தனர். அதில் புதூர் காந்திபுரத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழில் செய்யும் கண்ணன் (61) என்பதும், அவர் தான் ஓட்டல் உரிமையாளர் முத்துக்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர் கொலை குறித்து போலீசாரிடம் கூறியதாவது, நான் கடைக்கு விறகு போட வந்தேன். அப்போது முத்துக்குமார் மது போதையில் விறகு வேண்டாம் என்றார். மேலும் நானும் போதையில் இருந்ததால் சாப்பிட முடிவு செய்து அவரிடம் இட்லி கேட்டேன். அவரும் எனக்கு இட்லி கொடுத்து பரிமாறினார். நான் சாப்பிட்டு முடிந்ததும் எனக்கு பில் ஒன்றை கொடுத்தார். அதில் இட்லியுடன் சமோசாவுக்கு சேர்த்து பில் இருந்தது. உடனே அவரிடம் நான் இட்லி மட்டும் தான் சாப்பிட்டேன் என்றும், எதற்கு சமோசாவிற்கு சேர்த்து பில் போட்டு உள்ளீர்கள் என்று கேட்டேன்.
ஆனால் அவர் நீ இட்லியுடன் சேர்த்து சமோசாவும் சாப்பிட்டு உள்ளாய் ஒழுங்காக பில்லை கொடுத்து விட்டு செல் என்று என்னை கட்டாயப்படுத்தினார். இதனால் எங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது அவர் என்னை தாக்கினார். சாப்பிடாத சமோசாவிற்கு பணம் கேட்டு தாக்கியதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே விறகு வெட்டும் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டேன் என்று கூறினார். சமோசாவிற்காக கொலை நடந்ததால் இது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






