தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு


தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 12 Nov 2021 9:51 PM IST (Updated: 13 Nov 2021 1:55 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பற்றியதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 85). அந்த பகுதியில் உள்ள ரொட்டி தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவருடைய மனைவி சரஸ்வதி (75). இவர் சத்தியில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. 

இவர்கள் வசித்து வந்த வீடு சிறிய வீடு ஆகும். அந்த வீட்டில் தொலைக்காட்சி பெட்டி, கியாஸ் அடுப்பு, பீரோ மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளது. சரஸ்வதி காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் வீடு திரும்புவார். செல்லும்போது தன்னுடைய கணவர் குப்புசாமிக்கு சாப்பாடு செய்து விட்டு சென்றுவிடுவார். மதியம் அந்த சாப்பாட்டை அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் எடுத்து குப்புசாமிக்கு கொடுப்பர். 

நேற்று முன்தினம் வழக்கம்போல் ஓட்டலுக்கு வேலைக்கு சரஸ்வதி சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தானும் சாப்பிட்டுவிட்டு, தன்னுடைய கணவருக்கும் சாப்பாடு கொடுத்தார். இதைத்தொடர்ந்து வீட்டின் வெளியே உள்ள நாற்காலியில் குப்புசாமி தூங்கினார். அவர் தினமும் நாற்காலியில் தூங்குவதுதான் வழக்கம். இதேபோல் சரஸ்வதி வீட்டை சாதாரணமாக அடைத்துவிட்டு  உள்ளே கட்டிலில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததார். 

இரவு 11.30 மணி அளவில் திடீரென தொலைக்காட்சி பெட்டி தீப்பிடித்து வெடித்ததாக கூறப்படுகிறது.

இந்த தீ அருகில் இருந்த சரஸ்வதியின் கட்டிலில் பற்றியதுடன், அவருடைய சேலையிலும் பற்றியது. இதற்கிடையே கரும்புகை வீட்டை சூழ்ந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சரஸ்வதி உடல் கருகி வீட்டின் உள்ளேயே விழுந்தார்.

இதற்கிடையே அவருடைய வீட்டின் அருகே இருந்தவர்களுக்கு கரும்புகை நெடி வந்ததை தொடர்ந்து அவர்கள் தங்களுடைய வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தனர். 

அப்போது சரஸ்வதியின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தொலைக்காட்சி பெட்டி மற்றும் பொருட்கள் எரிந்து கிடந்ததுடன், சரஸ்வதி உடல் கருகிய நிலையில் கிடந்ததை பார்த்தனர்.

உடனே அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்  செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுபற்றி அறிந்தும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
1 More update

Next Story