விற்ற வீட்டை திரும்பக்கேட்டும் தராததால் கல்லூரி மாணவர் கொலை: காண்டிராக்டர் கைது

மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர். விற்ற வீட்டை திரும்பக்கேட்டும் தராததால் மகனை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மொடக்குறிச்சி,
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சைஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். அவருடைய மனைவி காஞ்சனா தேவி (வயது 45). அருள்ராஜ் ஈரோட்டில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர்களுடைய ஒரே மகன் சிபிராஜ் (19).
சிபிராஜ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று சிபிராஜ் வீட்டில் தனியாக இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டிருந்தார். அப்போது கடையில் இருந்த அவரது தந்தை செல்போனில் சிபிராஜை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அருள்ராஜ் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு சிபிராஜ் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிபிராஜ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலையாளியை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் மொடக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் மாலை சாவடிப்பாளையம் புதூர் நுழைவுபாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் ஈரோடு கொல்லம்பாளையம் இந்திராநகரை சேர்ந்த முருகையன் என்பவரது மகன் யோகானந்தன் (33) என்பதும், கட்டிட காண்டிராக்டரான இவர் கல்லூரி மாணவர் சிபிராஜை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முடித்துவிட்டு கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறேன். நான் கடந்த 2016-ம் ஆண்டு நஞ்சைஊத்துக்குளி பாலிடெக்னிக் நகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி எனது பெற்றோர் மற்றும் மனைவி அபிநயா (30) ஆகியோருடன் வசித்து வந்தேன். இந்த நிலையில் அந்த வீட்டை டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வந்த அருள்ராஜுக்கு ரூ.40 லட்சத்திற்கு விற்றேன். கடந்த 3 ஆண்டுகளில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டேன். நான் ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய ராசியான வீட்டை விற்றதால் தான் எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக நினைத்தேன்.
இதனால் அருள்ராஜிடம் அந்த வீட்டை திரும்ப என்னிடம் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தி வந்தேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருள்ராஜின் வீட்டில் நடந்த நகை திருட்டின்போது, என் மீது போலீசார் சந்தேகப்பட்டு விசாரித்தனர். இதனால் நான் அருள்ராஜ் குடும்பத்தின் மீது கோபத்தில் இருந்து வந்தேன்.
இந்தநிலையில் சிபிராஜுக்கு கல்லூரி படிப்புக்காக மடிக்கணினி தேவைப்படுவதாக அறிந்தேன். அதனை நான் வாங்கித் தருகிறேன் என்று கூறி சிபிராஜின் தந்தை அருள்ராஜிடம் இருந்து ரூ.27 ஆயிரத்தை பெற்று கொண்டேன். ஆனால் நான் மடிக்கணினி வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தேன். இதனால் எனக்கும், அருள்ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையில் அவருடைய மகன் சிபிராஜை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று மடிக்கணினி வாங்கி வந்ததாக கூறி அருள்ராஜின் வீட்டுக்கு நான் சென்றேன். அப்போது அங்கு சிபிராஜ் மட்டும் தனியாக இருப்பதை பார்த்தேன். உடனே நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிபிராஜ் கழுத்தில் சரமாரியாக குத்தினேன். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் இறந்தார்.
அதன்பின்னர் நான் வீட்டின் மாடிக்கு சென்று அங்கு பீரோவில் இருந்த 2 வளையல்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றேன். ஆனால் எப்படியும் என்னை போலீசார் பிடித்துவிடுவார்கள் என்று எண்ணினேன். இதனால் வெளியூர் தப்பி செல்வதற்காக சாவடிப்பாளையம்புதூரில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு யோகானந்தன் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story






