கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 134 பேருக்கு பாதிப்பு

கோவையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் நாள்தோறும் 4,500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் தமிழக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் பிடித்தது. இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவு படுத்தப்பட்டது. சுகாதார துறையின் தீவிர நடவடிக்கை காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் கோவையில் கடந்த 6-ந் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்து காணப்பட்டது. மேலும் தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்திலும், கோவை 2-ம் இடத்திலும் இருந்து வந்தது. கொரோனா தொற்று குறைந்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து இருந்தனர்.
தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோவையில் கடந்த 9-ந் தேதி 98 பேருக்கும், 10-ந் தேதி 101 பேருக்கும், 11-ந் தேதி 109 பேருக்கும், நேற்றுமுன்தினம் 108 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று 134 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் சென்னையில் நேற்று 120 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் கோவை மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 177 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 584 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 61 வயது ஆண், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 48 வயது பெண் என 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 435 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 1,158 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






