3% இடஒதுக்கீடு - சிலம்பம் விளையாட்டு சேர்ப்பு


3% இடஒதுக்கீடு - சிலம்பம் விளையாட்டு சேர்ப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 3:50 PM IST (Updated: 18 Nov 2021 3:50 PM IST)
t-max-icont-min-icon

அரசுப்பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சேர்த்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

சென்னை,

விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களுக்கும் சாதனை படைத்தவர்களுக்கும் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது ஆரம்பத்தில் 2 சதவீதமாக இருந்தது.  இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டார். இந்தப் பிரிவில் பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்று இருந்தது. 

ஆனால் தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பம் இடம்பெற வில்லை. சிலம்பம் விளையாட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதையடுத்து சிலம்பத்தையும் 3 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்குமாறு சிலம்பம் கற்கும் மாணவர்களும்,  பயிற்சியாளர்களும் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில்  திமுக அரசு இந்தக் கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சிலம்பம் சேர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல துறை சார்ந்த அமைச்சர் மெய்யநாதனும் இன்னும் சில நாட்களில் அரசாணை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். 

தற்போது 3 சதவீத இடஒதுக்கீட்டில் சிலம்பத்தை சேர்த்து தமிழக  அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  தேசிய, மாநில அளவில் சிலம்பப் போட்டியில் சாதனை படைப்பவர்கள் இந்த இடஒதுக்கீட்டால் பயன்பெறுவார்கள்.

தமிழக அரசுப்பணியில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் இனி சிலம்பம் வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
1 More update

Next Story