முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு


முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 10:12 PM GMT (Updated: 30 Nov 2021 10:12 PM GMT)

மோசடி வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவருக்கு எதிராக ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி கொடுத்த புகார்களின் அடிப்படையில் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வாதிட்ட மூத்த வக்கீல் அஜ்மல்கான் கூறியதாவது:-

ரவீந்திரனின் மருமகனுக்கு ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பதவி வாங்கித்தருவதாக கூறி ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் விஜய் நல்லதம்பி முதல் குற்றவாளியாகவும், கே.டி.ராஜேந்திர பாலாஜி 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடுமையான விமர்சனம்

அதேபோல பலருக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி தன் மூலம் ரூ.3 கோடி ஏமாற்றிவிட்டதாக விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே குற்றச்சாட்டுக்கு 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன. புகார்தாரர் பல அரசியல் கட்சிக்கு தாவியவர். விஜய் நல்லதம்பிதான் இந்த மோசடியை செய்துள்ளார். ஆனால் அவரை போலீசார் பாதுகாக்கின்றனர். மனுதாரர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து பேசிவிட்டார். அதனால் அவரை அரசியல்ரீதியாக பழிவாங்க இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவர் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

தள்ளிவைப்பு

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஒரே குற்றச்சாட்டுக்காக 2 வழக்குகள் பதிவு செய்யவில்லை. ரவீந்திரனிடம் ரூ.30 லட்சமும், பிறரிடம் பல கோடி ரூபாயும் ராஜேந்திர பாலாஜி மோசடி செய்துள்ளார். இதை ஒரே குற்றமாக கருதமுடியாது. இவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது’ என்று வாதிட்டார்.

ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பல இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Next Story