தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்


தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
x
தினத்தந்தி 1 Dec 2021 5:13 AM GMT (Updated: 1 Dec 2021 5:13 AM GMT)

தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

உருமாறிய புதிய கொரோனா வைரசான ஒமிக்ரான், கடந்த ஒரு வார காலத்திற்குள் 14 நாடுகளில் கால் தடம் பதித்து, உலகை அச்சுறுத்தி வருகிறது. 

இதனைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை, விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12 நாடுகள் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம் மொரீஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகியவை உள்ளன. 

இந்த 12 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், நெகட்டிவ் முடிவு வந்தாலும்கூட அதன்பின் அவர்கள் தங்களை அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 7-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்து, மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை நீட்டிக்க வேண்டும் என சுகாதாரத் துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் நாளை ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்கள் அனைவரும் 7 நாள் கண்காணிக்கப்படுகிறார்கள். கண்காணிப்பின்றி விமான பயணிகள் யாரும் வெளியே வர முடியாது” என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Next Story