காகிதமில்லா நிர்வாகத்தை உருவாக்க அனைத்து அரசு துறைகளும் ‘டிஜிலாக்கர்’ முறையை பயன்படுத்த வேண்டும்


காகிதமில்லா நிர்வாகத்தை உருவாக்க அனைத்து அரசு துறைகளும் ‘டிஜிலாக்கர்’ முறையை பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 Dec 2021 2:24 AM IST (Updated: 2 Dec 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

காகிதமில்லா நிர்வாகத்தை உருவாக்க அனைத்து அரசு துறைகளும் ‘டிஜிலாக்கர்’ முறையை பயன்படுத்த வேண்டும் தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்களுக்கு ஆவணங்கள், சான்றிதழ்களை மின்னணு (டிஜிட்டல்) முறையில் வழங்குவதற்கும், அதன் மூலம் அரசு அலுவலகங்களில் காகிதத்தின் உபயோகத்தை நீக்குவதற்கும் ’டிஜிலாக்கர்’ என்ற புதிய முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.

மின்னணு முறையில் ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எந்த இடத்தில் இருந்தாலும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதுபோல அவற்றை மின்னணு முறையில் சரிபார்க்கவும் முடியும். இதன் மூலம் காகித சான்றிதழ்கள், ஆவணங்களை தூக்கிக்கொண்டு செல்வது தவிர்க்கப்படும்.

இந்த புதிய முறை மூலம் அரசுத்துறைகள் வழங்கும் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள், ரேஷன் அட்டைகள், பல்வேறு உரிமங்கள் போன்றவை குடிமக்களின் ‘டிஜிலாக்கர்’ கணக்கில் சேர்ந்துவிடும்.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசுக்கு மின்னாளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி கடிதம் எழுதினார். அதில், அனைத்து அரசு துறைகளும் காகிதமில்லா நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காக ‘டிஜிலாக்கர்’ முறையை பின்பற்றுவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

மத்திய அரசின் இந்த வேண்டுகோளை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசின் அனைத்து துறைகள் மற்றும் அதன் கீழ் வரும் முகமைகளும் ‘டிஜிலாக்கரை’ பயன்படுத்த உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story