எத்தனை சோதனைகள் வந்தாலும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்


எத்தனை சோதனைகள் வந்தாலும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்
x
தினத்தந்தி 2 Dec 2021 9:03 PM GMT (Updated: 2 Dec 2021 9:03 PM GMT)

எத்தனை சோதனைகள் வந்தாலும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன் சசிகலா அறிக்கை.

சென்னை,

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அர்ப்பணித்துள்ளேன். அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் கட்சியையும், கட்சி தொண்டர்களையும் காப்பதே நம் முதல் கடமை.

ஒவ்வொரு தொண்டனும் பெருமையோடும், மிடுக்கோடும், கர்வத்தோடும் தன்னை இந்த சமூகத்தில் சொல்லிக் கொள்ளும் வகையில் நம் இயக்கத்தை விரைவில் மாற்றிக் காட்டுவோம்.

அண்மைக்காலமாக எந்தவித காரணமும் இல்லாமல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உதாசீனப்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் தாங்களாக ஒதுங்கி கொண்டு செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொறுத்து இருங்கள். உங்கள் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். விரைவில் கட்சியின் நிலை மாறும், தலை நிமிரும். எத்தனை இடர்பாடுகள், சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தை காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் உழைத்துக் கொண்டே இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story