மதுரை, விருதுநகர், நெல்லையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


மதுரை, விருதுநகர், நெல்லையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2021 4:43 AM IST (Updated: 3 Dec 2021 4:43 AM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதன் பின் வலுப்பெறும் புயல் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லையில் நாளை (சனிக்கிழமை) கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிகமாக மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்திலும் இயல்பை விட மழை அதிகமாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், வெப்பசலனம் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

‘ஜாவித்’ புயல்

மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவுக்குள் புயலாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா அருகே நாளை (சனிக்கிழமை) காலை கரையை நெருங்கும் என்று ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. புயல் உருவானால் அதற்கு ‘ஜாவித்' என்று பெயரிடப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறது.

இந்த நிகழ்வு காரணமாக, நாளை மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கனமழை பெய்யும் இடங்கள்

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 6-ந்தேதி (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டி உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘ஈரோடு 6 செ.மீ., ஈச்சன்விடுதி 5 செ.மீ., ஆவுடையார்கோவில், வீரபாண்டி தலா 4 செ.மீ., சோத்துப்பாறை, பர்லியார் தலா 3 செ.மீ., ஆண்டிப்பட்டி, பேராவூரணி, மணமேல்குடி, குன்னூர் பிடோ, விராலிமலை, போடிநாயக்கனூர், காரைக்குடி, சூரங்குடி, நாகப்பட்டினம், குடிமியான்மலை தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Next Story