பொறியியல் சேர்க்கை 2-வது கட்ட கலந்தாய்வு வழக்கு - ஐகோர்ட்டு தள்ளுபடி


பொறியியல் சேர்க்கை 2-வது கட்ட கலந்தாய்வு வழக்கு - ஐகோர்ட்டு தள்ளுபடி
x
தினத்தந்தி 3 Dec 2021 4:53 PM IST (Updated: 3 Dec 2021 4:53 PM IST)
t-max-icont-min-icon

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தும் அரசின் முடிவுக்கு தடை கோரிய வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை,

பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற்றது. இந்த நிலையில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப 2-வது கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் 2-வது கலந்தாய்வு நடத்தினால் தனியார் கல்லூரிகள் பாதிப்படையக் கூடும் என்பதால் இந்த அசராணையை ரத்து செய்யக்கோரி தனியார் சுயநிதி தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதால் 2-வது கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தகுதியான மாணவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி ஏ.ஐ.சி.டி.இ.க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், 2-வது கட்ட கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதையடுத்து அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story