முதலாமாண்டு கல்லூரி மாணவிகளுக்கு ராக்கிங் அதிகாரிகள் நேரில் விசாரணை
சேலத்தில் ஆதிதிராவிடர் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிகளுக்கு ராக்கிங் செய்வதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
சேலம்,
சேலம் சங்கர் நகரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு மாணவிகள் 5 பேர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களை விடுதியில் சக மாணவிகள் ராக்கிங் செய்வதாக கூறி அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்த புகார் குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சரளா மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளை தனித்தனியாக அழைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சரளா கூறும் போது, முதலாமாண்டு மாணவிகள் புகார் கூறியதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அங்கு சென்று விசாரணை நடத்தினோம். இனிமேல் இதுபோன்ற புகார்கள் வரக்கூடாது என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story