‘ஒமைக்ரான்' தொற்று பரவல் : பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்
ஒமைக்ரான் தொற்று பரவல் எதிரொலியாக பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
‘ஒமைக்ரான்' நோய்த்தொற்று இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து அனைத்து மாநில அரசுகளும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தமிழக அரசின் கல்வித்துறையும் இதில் அதிக கவனத்தை காட்ட தொடங்கியுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அந்த மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், ஒமைக்ரான் தொற்று விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவுரைகளில் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* அரசிடம் இருந்து பெறப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாது அனைத்து வகை பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். பள்ளிகள் நேரடியாக அல்லது ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தலாம்.
* அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும். இது மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆசிரியர்களுக்கு பொருந்தாது.
* அனைவரும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளிக்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். நீச்சல் குளங்கள் பள்ளிகளில் இருந்தால் மூடப்பட வேண்டும்.
* உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாடவேளைகள் அனுமதிக்கப்படாது. நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை நடவடிக்கைகள் அனுமதிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், மற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிகளுக்கு அறிவுரைகளை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story