ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட: வேட்புமனு வாங்க வந்த அ.தி.மு.க. தொண்டர் விரட்டியடிப்பு


ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட: வேட்புமனு வாங்க வந்த அ.தி.மு.க. தொண்டர் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 11:16 PM GMT (Updated: 3 Dec 2021 11:16 PM GMT)

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு வாங்க வந்த தொண்டர் விரட்டி அடிக்கப்பட்டார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான உள்கட்சி தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று தொடங்கியது.

இந்த தேர்தலை நடத்தும் கமிஷனர்களாக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு விண்ணப்ப படிவம் வினியோகம் நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவரது பெயரிலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவரது பெயரிலும் விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.

ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இன்று வேட்புமனு

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேரும் இணைந்து இன்று (சனிக்கிழமை) காலை வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர். இப்பதவிகளுக்கு இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வரமாட்டார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னை ஓட்டேரியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஓமப்பொடி பிரசாத் சிங் என்பவர், நான் ஒருங்கிணைப்பாளர் பதவியில் போட்டியிட வேட்புமனு விண்ணப்ப படிவம் வாங்க வந்திருக்கிறேன் என்று கூறியபடி கட்சி அலுவலகத்துக்குள் மதியம் 12.45 மணியளவில் சென்றார். அவரிடம், ‘ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மட்டும் தனியாக வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 2 பேர் சேர்ந்து வந்து, ஒரே நேரத்தில் தான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். மேலும் வேட்புமனுவை கட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவர்கள் முன்மொழிய வேண்டும்’ என்றுக்கூறி கட்சி நிர்வாகிகள் அவருக்கு விண்ணப்ப படிவம் வழங்க மறுத்துவிட்டனர்.

விரட்டியடிப்பு

இந்தநிலையில் வேட்புமனு கிடைக்காத விரக்தியுடன் ஓமப்பொடி பிரசாத் சிங் வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம், ‘அ.தி.மு.க. அடிப்படை தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு போட்டியிடலாம் என்ற அறிவிப்புக்கு இணங்க நானும் போட்டியிட விரும்பினேன். ஆனால் எனக்கு வேட்புமனு விண்ணப்பபடிவத்தை தர மறுத்துவிட்டனர். நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கிறேன். தற்போது நடைபெறும் உள்கட்சி தேர்தல் சட்டத்துக்கு புறம்பாக இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தலை நடத்திட வேண்டும்’ என்று பேட்டியளித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருந்த தொண்டர்கள் சிலர் அவரை தொடர்ந்து பேட்டி தர விடாமல் தடுத்தனர். பின்னர் அவரை தாக்கி கட்சி அலுவலகத்தை விட்டு விரட்டி அடித்தனர். இதனால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

போலீசில் புகார்

இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. தொண்டர் ஓமப்பொடி பிரசாத் சிங் சென்னை ராயப்பேட்டை போலீஸ்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர், ‘அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் போட்டியிட மனு வாங்க சென்ற என்னை அடித்து விரட்டிவிட்டனர். என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் வேட்புமனு வாங்க செல்வதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.

Next Story