அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு


அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Dec 2021 4:52 AM IST (Updated: 4 Dec 2021 4:52 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்குக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்தில் இருந்தே அடிப்படை உறுப்பினராக செயல்பட்டுள்ளேன். கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு கட்சி விதிகளில் திருத்தம் செய்தனர்.

பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினர். ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி தேர்வு செய்யப்பட்டனர்.

நீக்கம்

அதுமட்டுமல்லாமல் எந்த காரணத்தையும் கூறாமல் என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து 2018-ம் ஆண்டு நீக்கிவிட்டனர். அதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கடந்த 2-ந் தேதி அறிவித்துள்ளனர். இந்த தேர்தலை நடத்தும் ஆணையர்களாக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தடை வேண்டும்

கட்சி அடிப்படை உறுப்பினர்களுக்கு தெரியும் வகையில் 21 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது கட்சியின் விதி ஆகும். அடிப்படை உறுப்பினர்கள் சேர்க்கையிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு இதுவரை உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படவில்லை.

எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 21 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும். தேர்தலை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

27 ஆயிரம் தொண்டர்கள்

இந்த மனு அவசர வழக்காக நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘2018-ம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனுதாரர் எப்படி இந்த வழக்கை தொடரமுடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் வக்கீல் தியாகேஸ்வரன், ‘மனுதாரரை கட்சியில் இருந்து நீக்கியபிறகுதான் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டனர். கட்சி விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரரை போல் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் இந்த வழக்கில் இணைய தயாராக உள்ளனர்’ என்று வாதிட்டார்.

தாக்கினார்கள்

அப்போது, விருப்பமனு வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர் பிரசாத் சிங் ஆஜராகி, விதிகளை பின்பற்றாமல் 5 நாட்களில் தேர்தல் நடைமுறையை முடிக்க முயற்சி நடப்பதாகவும், விருப்பமனு வாங்க தலைமை அலுவலகம் சென்றபோது தன்னை வெளியில் துரத்தியதாகவும் கூறினார்.

ஓமப்பொடி பிரகாஷ் என்பவர் ஆஜராகி, கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்ற தன்னை அங்குள்ளவர்கள் தாக்கினர் என்று கூறினார். அதற்கு நீதிபதி, வழக்கு தொடர்ந்தவர் மட்டுமே பேச முடியும். மற்றவர்கள் பேச முடியாது என்று கண்டிப்புடன் கூறினார்.

தொடர்பு இல்லாதவர்

அ.தி.மு.க. கட்சி சார்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அரவிந்த் பாண்டியன் வாதிடும்போது, ‘3 ஆண்டுகளாக கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் எப்படி இதுபோன்ற வழக்கை தொடர முடியும்? கட்சியில் இருந்து நீக்கத்தை எதிர்த்து சிவில் வழக்காக தொடர்ந்து அதில் வெற்றிபெற்ற பின்னர்தான் இதுபோன்ற வழக்கை தொடரலாம்’ என்றார்.

வெற்றி அறிவிப்பு

அதற்கு கே.சி.பழனிச்சாமி தரப்பு வக்கீல், ‘5 நாட்களில் தேர்தலை நடத்துபவர்கள் 2 நாட்களில் பதில் மனுதாக்கல் செய்துவிடுவார்கள். வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும். பதில் அளிக்க நீண்ட கால அவகாசம் வழங்கினால், போட்டியிட யாரும் விண்ணப்பம் செய்யவில்லை, அதனால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றனர் என்று அறிவித்துவிடுவார்கள்’ என்று வாதிட்டார்.

பதில் அளிக்க வேண்டும்

அதையடுத்து, ‘வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பையும் கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது. மனுதாரர் விருப்பப்பட்டால் மனுவை தள்ளுபடி செய்கிறேன். அவர் டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்துகொள்ளலாம்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்கு குறித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும், விசாரணையை ஜனவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story