சமூக உரிமைகளை மனதில் கொண்டு நீதிபதிகள் செயல்பட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன்
சமூக உரிமைகளை மனதில் கொண்டு நீதிபதிகள் செயல்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் கூறினார்.
திறப்பு விழா
மதுரை ஐகோர்ட்டில் சட்ட தின விழா, கணினி மையம் மற்றும் அதிகாரிகள் குடியிருப்புகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சென்னை ஐகோர்ட்டு (பொறுப்பு) தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமை தாங்கினார். மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வரவேற்றார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கணினி மையத்தையும், எம்.எம்.சுந்தரேஷ் அதிகாரிகள் குடியிருப்பையும் திறந்து வைத்தனர்.
சமூக உரிமைகள்
விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-
அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை வழங்குகிறது. இதை மனதில் கொண்டு அனைத்து நீதிபதிகளும் செயல்பட வேண்டும். தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கு முன்னதாக சங்க இலக்கியத்துக்கு சமணர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். சமணர்களுக்கும் நமக்கும் எப்போதும் தொடர்பு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், கோர்ட்டுகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியம். நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் சற்று குறைவாகவே உள்ளது. இதற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணம். வரும் காலங்களில் நீதித்துறையில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என நம்புகிறோம். மதுரை ஐகோர்ட்டில் அதிகளவு வழக்குகள் தாக்கலாகின்றன. இதில் 60 சதவீத வழக்குகள் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளாகும். மதுரை ஐகோர்ட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.
முடிவில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், வக்கீல்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story