ஊட்டி மலை ரெயில் சேவை டிசம்பர் 14 வரை ரத்து


ஊட்டி மலை ரெயில் சேவை டிசம்பர் 14 வரை ரத்து
x
தினத்தந்தி 5 Dec 2021 9:26 PM IST (Updated: 5 Dec 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மலை ரெயில் சேவை வருகிற 14ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


கோவை,

கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்வை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 6ந்தேதி முதல் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஊட்டி-குன்னூர் இடையே 3 முறை, மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஒரு முறை இயக்கப்படுகிறது.

ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.350, 2-ம் வகுப்பு ரூ.150, மேட்டுப்பாளையத்துக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.600, 2-ம் வகுப்பு ரூ.295 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சீரமைப்பு பணி முடிந்து கடந்த அக்டோபர் மாதம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டது. இதனையொட்டி ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் ரெயில் பாதையில், அடர்லிக்கும் ஹில்குரோவுக்கும் இடைப்பட்ட பகுதியில் 16வது கிலோ மீட்டரில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.  இதனால் இரண்டு நாட்கள் ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.

2 நாட்களாக ரத்தாகிய மலைரெயில் சேவை கடந்த அக்டோபர் 9ந்தேதி மீண்டும் தொடங்கிய நிலையில்,
கடந்த அக்டோபர் 10ந்தேதி கல்லார்-அடர்லி இடையே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி ரெயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.  இதனையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிலையில், பாறைகள் மலை பகுதியில் இருந்து உருண்டு விழுந்து போக்குவரத்தில் தடை ஏற்படுத்தியது.  ஊழியர்கள் அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.  எனினும், தொடர் மழையால் ஊட்டி மலை ரெயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என கடந்த நவம்பர் 1ந்தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் வருகின்றன. தொடர் மழையால் ரெயில் தண்டவாளத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

ஊட்டி-குன்னூர் இடையே மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குன்னூர் வெலிங்டன்-அருவங்காடு இடையே உள்ள மலை ரெயில் தண்டவாளத்தில் விளைநிலத்தில் இருந்து மண்சரிவு ஏற்பட்டது.

தண்டவாளத்தில் மண் மற்றும் மரக்கிளைகளும் விழுந்தன. ரெயில் பாதையில் மேலும் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கம் கடந்த நவம்பர் 30ந்தேதி நிறுத்தப்பட்டது.  இந்த நிலையில், ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து சேவை வருகிற 14ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.


Next Story