மீண்டும் ஏற்றத்தில் தக்காளி விலை: கோயம்பேட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்பனை


மீண்டும் ஏற்றத்தில் தக்காளி விலை: கோயம்பேட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்பனை
x
தினத்தந்தி 6 Dec 2021 3:18 AM IST (Updated: 6 Dec 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை மீண்டும் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்கப்பட்டது. பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காயும் ரூ.100-ஐ நெருங்க உள்ளது.

சென்னை,

காய்கறி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை ஆனது. அதன் பின்னர் சற்று விலை குறையத்தொடங்கி, ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை சென்றது.

இந்த நிலையில் அதன் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரூ.90 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆனது. விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை ஏறுமுகத்திலேயே இருப்பதாகவும், இனி வரக்கூடிய நாட்களில் சற்று ஏற்ற, இறக்கத்துடனேயே அதன் விலை இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் மற்ற சில காய்கறி விலையை கேட்டால் அதை வாங்கும் சிந்தனைகூட வராத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது. உதாரணமாக முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரையில் விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவால், மும்பையில் இருந்து மட்டுமே முருங்கைக்காய் கொண்டு வரப்படுவதால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.

ரூ.100-ஐ நெருங்கிவிடும்

பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், குடைமிளகாய் ஆகியவற்றின் விலை இன்றோ அல்லது நாளையோ ரூ.100-ஐ நெருங்கிவிடும் அளவுக்கு உயர்ந்து, ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகிறது. இதுதவிர கேரட், பீர்க்கங்காய், கோவைக்காய், கொத்தவரங்காய், பாகற்காய், புடலங்காய், நூக்கல் ஆகியவற்றின் விலை ஒரு கிலோ ரூ.50-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

தொடர் மழை, பெரு வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக காய்கறி விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே அதன் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு இதே போல் தான் காய்கறி விலை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில் ஒரு கிலோ தக்காளி ரூ.16 முதல் ரூ.20-க்கும், அவரைக்காய் ரூ.40, பீன்ஸ் ரூ.35, வெண்டைக்காய் ரூ.8, கத்தரிக்காய் ரூ.40 என்ற அளவில் தான் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை (ஒரு கிலோ) நிலவரம் வருமாறு:-

பல்லாரி-ரூ.26 முதல் ரூ.36 வரை, தக்காளி-ரூ.75 முதல் ரூ.90 வரை, உருளைக்கிழங்கு-ரூ.18 முதல் ரூ.28 வரை, சாம்பார் வெங்காயம்-ரூ.45 முதல் ரூ.65 வரை, கேரட்-ரூ.40 முதல் ரூ.75 வரை, பீன்ஸ்-ரூ.80 முதல் ரூ.90 வரை, பீட்ரூட்-ரூ.35 முதல் ரூ.55 வரை, சவ்சவ்-ரூ.22 முதல் ரூ.25 வரை, முள்ளங்கி-ரூ.30 முதல் ரூ.40 வரை, முட்டைக்கோஸ்-ரூ.35 முதல் ரூ.40 வரை, வெண்டைக்காய்-ரூ.60 முதல் ரூ.80 வரை, கத்தரிக்காய்-ரூ.60 முதல் ரூ.90 வரை, பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.60, சுரைக்காய்-ரூ.30, சேனைக்கிழங்கு-ரூ.16 முதல் ரூ.18 வரை, முருங்கைக்காய்-ரூ.150 முதல் ரூ.180 வரை, சேப்பக்கிழங்கு-ரூ.15 முதல் ரூ.25 வரை, காலிபிளவர் (ஒரு பூ)-ரூ.35 முதல் ரூ.40 வரை, வெள்ளரிக்காய்-ரூ.18, பச்சைமிளகாய்-ரூ.30, பட்டாணி- ரூ.50, இஞ்சி-ரூ.30 முதல் ரூ.60 வரை, அவரைக்காய்-ரூ.80 முதல் ரூ.90 வரை, பூசணிக்காய்- ரூ.15, பீர்க்கங்காய்-ரூ.50 முதல் ரூ.60 வரை, நூக்கல்- ரூ.80, கொத்தவரங்காய்- ரூ.50, கோவைக்காய்- ரூ.60, குடைமிளகாய்- ரூ.90, தேங்காய் (காய் ஒன்று) - ரூ.34 முதல் ரூ.36 வரை, வாழைக்காய் (காய் ஒன்று) - ரூ.6.

Next Story