3 மணி நேரத்தில் 27.46 சென்டி மீட்டர் மழை பெய்தது: வெள்ளத்தில் மிதக்கும் மணப்பாறை


3 மணி நேரத்தில் 27.46 சென்டி மீட்டர் மழை பெய்தது: வெள்ளத்தில் மிதக்கும் மணப்பாறை
x
தினத்தந்தி 6 Dec 2021 8:03 PM GMT (Updated: 6 Dec 2021 8:03 PM GMT)

மணப்பாறையில் 3 மணி நேரத்தில் 27.46 சென்டி மீட்டர் மழை பெய்ததால் குளம் உடைந்தது. தரைப்பாலங்களும் மூழ்கின. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் தொடர்மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் மழை கொட்டித் தீர்த்தது.

இந்த மழை காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரை 27.46 சென்டி மீட்டர் பெய்தது. இதனால் மணப்பாறையில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

குளம் உடைப்பு

மணப்பாறை ராஜிவ் நகரில் உள்ள அப்புஅய்யர் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதேபோல் கரிக்கான்குளம் பகுதியில் குளத்து நீரை ஓரமாக வெட்டி விட்டதால் அந்த நீரும் ஆர்ப்பரித்து வெளியேறியது. இதனால் மணப்பாறை பஸ் நிலையம் முன்பு சுமார் 3 அடி உயரம் வரை தண்ணீர் ஓடியது. கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியதால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பஸ் நிலையத்தில் சூழ்ந்த தண்ணீர்

மணப்பாறை பஸ் நிலையத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. இதனால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் பழுதாகின. இதனால் அதனை தள்ளிக் கொண்டு செல்லும் சூழ்நிலை காணப்பட்டது. அதேபோல் நான்கு சக்கர வாகனங்களும் தடுமாறியபடியே சென்றது. பஸ்நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல முடியாததால் பஸ்கள் அனைத்தும் திண்டுக்கல் சாலை, திருச்சி சாலை, கோவில்பட்டி சாலை, மதுரை சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதுமட்டுமின்றி நகரில் வாகனங்கள் இல்லாத நிலை காணப்பட்டது.

தரைப்பாலம் மூழ்கியது

இதேபோல் மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள இரண்டு தரைப்பாலங்கள் மூழ்கி நீர் முழுவதுமாக வெளியேறியதால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது.

தேனியில் கொட்டி தீர்த்த கனமழை

தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடி, கூடலூர், உத்தமபாளையம் என மாவட்டம் முழுவதும் நேற்று விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கொட்டக்குடி, முல்லைப்பெரியாறு, வைகை உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் 85 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 46 எக்டேர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கின.

Next Story