126 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி அசத்திய டி.ஜி.பி. சைலேந்திரபாபு!


126 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி அசத்திய டி.ஜி.பி. சைலேந்திரபாபு!
x
தினத்தந்தி 7 Dec 2021 8:46 AM IST (Updated: 7 Dec 2021 8:46 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தானில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு 126 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி அசத்தினார்.

சென்னை,

குழந்தைப்பருவ புற்றுநோய்க்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், சிகிச்சைக்கான ஆதரவையும், நிதியையும் திரட்டும் நோக்கிலும் அப்போலோ நிறுவனம் சார்பில் சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது. 

‘டி-2-டி டூவத்லான்' என்ற பெயரில் நடைபெற்ற இந்தியாவின் முதல் மெய்நிகர் டூவத்லான் நிகழ்ச்சியில், டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் மாரத்தான் நெவில் எண்டீவர்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் நெவில் ஜே.பிலிமோரியா ஆகியோர் கலந்துகொண்டு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டியில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்த பயணம், சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் சென்டரில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கி, பழைய மகாபலிபுரம் சாலை வழியாக, மகாபலிபுரம் பூஞ்சேரி சந்திப்பு, திருக்கழுக்குன்றம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தரமணிக்கு பகல் 11 மணிக்கு வந்தடைந்தது. 6 மணி நேரம் நடைபெற்ற இந்த சைக்கிள் பயணத்தின் தூரம் 126 கிலோ மீட்டர் ஆகும். இதில் 60 வயதை நெருங்கி வரும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர பாபு, 126 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி அசத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது, 

“குழந்தை புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். எனவே இந்த பிரச்சினை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இப்போது மிக முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், நடைமுறைகளையும் வாழ்க்கையின் ஒரு வழிமுறையாக முன்னிலைப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி உதவும்” என்றார்.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி கூறும்போது, “குழந்தைப்பருவ புற்றுநோய் வராமல் தடுப்பதும், ஆரம்பநிலையிலேயே இதன் பாதிப்பை கண்டறிவதும் ஒரு குழந்தையின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு பெரிய அளவில் உதவும்” என்றார்.

Next Story