மீன்நாற்றம் வீசுவதாக பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட: அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் பணியிடை நீக்கம்


மீன்நாற்றம் வீசுவதாக பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட: அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 7 Dec 2021 8:52 PM GMT (Updated: 7 Dec 2021 8:52 PM GMT)

மீன்நாற்றம் வீசுவதாக கூறி பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கி விட்டதை தொடர்ந்து அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த பெண் செல்வம் மேரி (வயது 65). மீன் வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு செல்வதற்காக குளச்சல் பஸ் நிலையத்துக்கு வந்தார். வாணியக்குடி செல்லும் அரசு பஸ் வந்ததும் அதில் செல்வம் மேரி ஏறியுள்ளார். அவரை பார்த்ததும், பஸ் கண்டக்டர், மீன் நாற்றம் வீசுவதால் பஸ்சில் பயணம் செய்ய முடியாது எனக்கூறி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆவேசமடைந்த பெண்

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் மேரி பஸ் நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு சென்று, பஸ்சில் ஏறிய பெண்ணை எப்படி இறக்கி விடலாம். இது என்ன நியாயம்? இதுபற்றி நான் புகார் செய்வேன் என்று ஆவேசமாக கூறினார். மேலும் அங்கு நின்றவர்களிடம், நான் வாணியக்குடி வரை நடந்தா செல்ல வேண்டும்? என்று கண்கலங்கிய படி கூறிவிட்டு பஸ் நிலைய சுற்று சுவரில் சாய்ந்தபடி நின்றார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பஸ்சில் நடக்கும் நவீன தீண்டாமையா? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அந்த கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

பணியிடை நீக்கம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பஸ் கண்டக்டர் மணிகண்டன், டிரைவர் மைக்கேல் மற்றும் நடந்த சம்பவத்தை அதிகாரிகளுக்கு தெரிவிக்காததால், அப்போது பஸ் நிலையத்தில் நேர காப்பாளராக இருந்த ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

இச்சம்பவத்தை கண்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரை பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாக கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.

மகளிர் மேம்பாட்டுக்காக கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story