மாநகராட்சி பள்ளிகள் ரூ.61¾ கோடி செலவில் நவீன வசதிகளுடன் சீரமைப்பு ககன்தீப் சிங் பேடி தகவல்


மாநகராட்சி பள்ளிகள் ரூ.61¾ கோடி செலவில் நவீன வசதிகளுடன் சீரமைப்பு ககன்தீப் சிங் பேடி தகவல்
x
தினத்தந்தி 7 Dec 2021 10:22 PM GMT (Updated: 8 Dec 2021 11:46 AM GMT)

சென்னை மாநகராட்சி பள்ளிகள் ரூ.61¾ கோடி செலவில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

2021-22-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையின் விவாதத்தின் போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி, கோட்டூரில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி, கம்தார் நகரில் உள்ள ஆரம்ப பள்ளி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புல்லா அவென்யூவில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி, பந்தர் கார்டனில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மார்க்கெட் தெருவில் உள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளி என மொத்தம் 8 சென்னை பள்ளிகளில் ரூ.21.77 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் இறுதி

ஏற்கனவே மார்க்கெட் தெரு, புதிய மார்க்கெட் பகுதி, சுப்பராயன் தெரு, காந்திகிராமத்தில் உள்ள 6 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.17.38 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சைதாப்பேட்டை, ஜோன்ஸ்சாலை, நுங்கம்பாக்கம், பட்டேல் நகர், கூக்ஸ் சாலை, சர்மா நகர், ஆழ்வார்ப்பேட்டை பகுதிகளில் உள்ள 12 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.22.55 கோடி மதிப்பில் வகுப்பறைகள் உட்பட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கான திட்ட மதிப்பீடு முடிவுற்றவுடன் நிர்வாக அனுமதி பெறப்பட்டு விரைவில் ஒப்பந்தம் கோரப்படும்.

எதிர்காலம் வளமாகும்

அந்தவகையில் ரூ.61.70 கோடி செலவில், சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டபணிகள் சி.ஐ.டி.ஐ.ஐ.எஸ் மற்றும் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மேற்குறிப்பிட்ட பணிகள் முழுமையடையும் போது, சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வித் திறன் ஆகியவை மேம்பட்டு அவர்களின் எதிர்காலம் வளமானதாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story