குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; விசாரணைக்கு விமானப்படை உத்தரவு
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
குன்னூர்,
கோவை மாவட்டம் சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் நோக்கி இன்று விமானப்படைக்கு சொந்தமான மிக்-17வி5 ரக ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட மொத்தம் 14 பேர் பயணித்தனர். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப்படை கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் பயணித்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த நிலையில் அவரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.
விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற பகுதி முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story