குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - பிபின் ராவத் நிலை என்ன?
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது என ஏ.என்.ஐ. நிறுவனம் தெரிவித்துள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எறிந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மரபணு பரிசோதனை மூலம் உயிரிழந்தவர்களின் விவரங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன ஆனது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Related Tags :
Next Story