வீட்டுவசதி வாரிய வீட்டில் குடியிருக்கும் அரசு ஊழியரை வெளியேற்ற வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


வீட்டுவசதி வாரிய வீட்டில் குடியிருக்கும் அரசு ஊழியரை வெளியேற்ற வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Dec 2021 12:19 AM IST (Updated: 9 Dec 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

தவணைத் தொகையை செலுத்தாமல் 23 ஆண்டுகள் சேலம் வீட்டுவசதி வாரிய வீட்டில் வசிக்கும் அரசு ஊழியரை வெளியேற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சேலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஆர்.ராஜேந்திரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு வீடு ஒதுக்கியதை ரத்து செய்து வீட்டு வசதி வாரியம் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்து, வீட்டைத் தன் பெயருக்கு கிரைய பத்திரம் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியரான மனுதாரருக்கு 1988-ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 300-க்கு வீடு ஒதுக்கப்பட்டது.

போலி ஆவணம்

இந்தநிலையில், இந்த வீட்டை வாங்க ராஜேந்திரன் போலி ஆவணங்களை தயாரித்து வழங்கியதாகவும், அதன்படி வீட்டு கடன் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு முருகானந்தம் என்பவர் கடந்த 2002-ம் ஆண்டு புகார் அனுப்பினார்.

இது தீவிரமான குற்றச்சாட்டு என்பதால், வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் வீட்டை பூட்டு போட்டு பூட்டினார். ஆனால், மனுதாரர் ராஜேந்திரன் அந்த பூட்டை உடைத்து அத்துமீறி வீட்டுக்குள் குடியேறி உள்ளார்.

வழக்கு தள்ளுபடி

இதன் பின்னர் தவணை தொகையை அவர் ஒழுங்காக செலுத்தாததால், வீட்டை ஒதுக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய அதிகாரி நடவடிக்கை எடுத்தார், இதை எதிர்த்து வழக்கு தொடராமல், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு 2007-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சிவில் கோர்ட்டில் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார்,

மேலும் இந்த வீட்டுக்காக மனுதாரர் இதுவரை ரூ.71 ஆயிரத்து 660 மட்டுமே செலுத்தியுள்ளார் என்றும், எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் வீட்டுக்கு மேல் 2 வீடுகளையும் கட்டியுள்ளார் என்றும் அரசு தரப்பு வக்கீல் கூறினார்,

இடிக்க வேண்டும்

அதாவது தவணை தொகையை செலுத்தாமல் 23 ஆண்டுகளாக இந்த வீட்டில் மனுதாரர் வசித்து வருகிறார். அரசு ஊழியரான மனுதாரர் வீட்டு கடன் வாங்க போலி ஆவணங்கள் தயாரித்தது மட்டுமல்லாமல், அனுமதியின்றி வீட்டிற்கு மேல் 2 தளங்களை வேறு கட்டியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இந்த வீட்டை சேலம் மாநகராட்சி ஆணையர் 2 வாரத்துக்குள் ஆய்வு செய்ய வேண்டும். சட்டவிரோத கட்டிடம் கட்டப்பட்டிருப்பது உறுதியானால், சட்டப்படி அவற்றை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளியேற்ற வேண்டும்

அதேபோல மனுதாரரை வீட்டை விட்டு வெளியேற்றவும், அவரிடம் பாக்கித் தொகையை வசூலிக்கவும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story