முப்படை தலைமை தளபதி ராவத் பலி - மனைவி உள்பட மேலும் 12 பேர் இறந்த பரிதாபம்


முப்படை தலைமை தளபதி ராவத் பலி - மனைவி உள்பட மேலும் 12 பேர் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 8 Dec 2021 11:28 PM GMT (Updated: 2021-12-09T04:58:34+05:30)

குன்னூர் அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். இந்த விபத்தில் ராவத்தின் மனைவி உள்பட மேலும் 12 பேர் பலியானார்கள்.

குன்னூர்,

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்தவர், பிபின் ராவத் (வயது 63).

மனைவியுடன் வந்தார்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பதவியில் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பணியாற்றி வந்த இவர், முன்னதாக ராணுவ தளபதியாகவும் இருந்தார்.

இவர் நேற்று நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மனைவி மதுலிகா ராவத்துடன் தமிழகம் வந்தார்.

ராணுவ விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த அவர்கள், சிறிது நேரம் அங்கேயே ஓய்வு எடுத்தனர்.

கட்டுப்பாட்டை இழந்தது

பின்னர் விமானப்படைக்கு ெசாந்தமான ‘எம்.ஐ.17 வி 5’ ரக ஹெலிகாப்டர் மூலம் பகல் 11.30 மணிக்கு வெலிங்டன் புறப்பட்டனர். இந்த ஹெலிகாப்டரில் பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத், ராணுவ கமாண்டோக்கள் மற்றும் 4 விமானிகள் என 14 பேர் இருந்தனர். ஹெலிகாப்டரை விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான் ஓட்டினார்.

இந்த ஹெலிகாப்டர் குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள காட்டேரி பூங்கா, நஞ்சப்ப சத்திரம் பகுதியில் பகல் 12.05 மணியளவில் ெசன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தரையை நோக்கி வந்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. மிகவும் அடர்ந்த அந்த வனப்பகுதியில், ஹெலிகாப்டரின் காற்றாடி மரத்தில் மோதி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

தீயில் கருகினர்

கீழே விழுந்ததும் ஹெலிகாப்டர் நொறுங்கி தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென பரவிய தீ ெஹலிகாப்டர் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.

இதில் ஹெலிகாப்டருக்குள் இருந்த அனைவரும் தீயில் சிக்கி உடல் கருகினர்.

ஹெலிகாப்டர் விழுந்தபோது சம்பவ இடத்தில் வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

உடல்கள் சிதறி கிடந்தன

அப்போது ஹெலிகாப்டரில் இருந்த ராணுவ அதிகாரிகள் சிலரின் உடல்கள் நாலாபுறமும் சிதறி கிடந்தன. ேமலும் சிலர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

உடனே அவர்களை மீட்க பொதுமக்கள் முயன்றனர். ஆனால் ஹெலிகாப்டரின் எரிபொருள் டேங்க் முழுவதும் நிரப்பப்பட்டு இருந்ததால், அதில் பிடித்த தீ ஜூவாலைகள் பல அடி உயரத்துக்கு எழுந்தன.

இதனால் கிராம மக்களால் ஹெலிகாப்டருக்கு அருகே செல்ல முடியவில்லை. எனினும் அவர்கள் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களால் தீயை அணைக்க முயன்றனர்.

ராணுவ அதிகாரிகள் விரைந்தனர்

இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து மீட்பு குழுவினரும், தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் ஹெலிகாப்டரில் பிடித்த தீைய அணைத்து, அதில் இருந்தவர்களை மீட்கும் பணிகளை தொடங்கினர். அவர்களுடன் மருத்துவ குழுவினர், ராணுவ உயர் அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

மேலும் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர்.

எனினும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்ததால் அதில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணி தாமதம் ஆனது.

பிபின் ராவத் மரணம்

நீண்ட போராட்டத்துக்குப்பின் சுமார் 2 மணி நேரத்துக்குப்பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் கருகிய உடல்கள் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் வெலிங்டனில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்களில் பலரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் படுகாயம் அடைந்திருந்தார். வெலிங்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தகவலை மாலையில் விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த விபத்தில் அவரது மனைவி மதுலிகா ராவத்தும் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்கள் விவரம்

இவர்கள் இருவரையும் சேர்த்து ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்தது. அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

1. பிபின் ராவத் (முப்படை தலைமை தளபதி)

2. மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)

3. பிரிகேடியர் லிட்டர்

4. கர்னல் ஹர்ஜிந்தர் சிங்

5. குர்சேவக் சிங்

6. ஜிதேந்திர குமார்

7. விவேக் குமார்

8. சாய்தேஜா

9. சத்பால்

இவர்களை தவிர உயிரிழந்த மேலும் 4 பேர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. மீட்பு பணிகள் மாலை 3.10 மணியளவில் நிறைவடைந்தது.

ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்

இந்த விபத்தில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண் சிங் மட்டும் உயிர் தப்பினார். படுகாயமடைந்துள்ள அவரும் கவலைக்கிடமான முறையில் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உயிரை பறித்த இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

எனினும் இந்த ஹெலிகாப்டர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து சில கிலோ மீட்டருக்கு முன்புதான் விழுந்து நொறுங்கியுள்ளது. அதாவது தரையிறங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்ேபாது அங்கே பனிமூட்டமாக இருந்துள்ளது.

எனவே தரையிறங்குவதற்காக தாழ்வாக பறந்தபோது மோசமான வானிலை காரணமாக மரத்தில் மோதி கீழே விழுந்து தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உயர்மட்ட விசாரணை

ஹெலிகாப்டர் குறித்து தகவல் அறிந்ததும் அது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் முடிவில், விபத்துக்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் மத்திய அரசு வட்டாரங்கள் கடும் அதிர்ச்சியில் மூழ்கின. டெல்லி வட்டாரங்கள் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

பிரதமருக்கு ராஜ்நாத் சிங் விளக்கம்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவை மற்றும் வெலிங்டனில் உள்ள ராணுவம் மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ேபசிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், விபத்து குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விபத்து குறித்து விளக்கினார்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கே அவரது மகளுக்கு ஆறுதல் கூறினார்.

இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்திருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. அத்துடன் மத்திய அரசுக்கும், முப்படையினருக்கும் பெரும் அதிர்ச்சியையும் ெகாடுத்து உள்ளது.

Next Story