70 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி மலையில் நடந்த மோசமான விமான விபத்து குறித்து தெரியுமா...?
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டக்லஸ் மாடல் சி-47பி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் கடந்த 8 ஆம் தேதி நாட்டின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி உள்பட 14 பேர் சென்ற எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற விமான விபத்து இந்த மலைப்பகுதியில் நடந்த 2-வது மோசமான விபத்தாகும்.
இதற்கு முன் கடந்த 1950 ஆம் ஆண்டு பயணிகள் விமானம் ஒன்று மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். இதுதான் இந்த மலைப்பகுதியில் நடந்த முதல் விபத்து மற்றும் மோசமான விபத்தாகும்.
1950 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நீலிகரி மாவட்டத்தில் கில் கோத்தகிரி அருகே ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டக்லஸ் மாடல் சி-47பி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உலகப் புகழ்பெற்ற புள்ளியியல் வல்லுநர் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் செல்ல வேண்டியது. அதற்கு முன் பெங்களூரு, கோவை சென்று அதன்பின் இறுதியாக திருவனந்தபுரம் செல்லும். பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, கோவையில் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது விமானம் மலையில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தை கேப்டன் ஆன்ட்ரூ வைஸ்மேன், துணை விமானி ராம்நாத் நாராயண் அய்யர், ரேடியோ அதிகாரியாக காசர்கோடு அப்பு ஷெனாய் இருந்தார். மூவரும் கோவை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு வந்தனர். தரையிறங்க 12 நிமிடங்கள் இருந்தபோது, காலை 10.20 மணிக்கு விமானம் கட்டுப்பாட்டு அறையின்தகவல் தொடர்பிலிருந்து திடீரென துண்டிக்கப்பட்டது.
ஆனால், கோவை அப்சர்வேட்டரி சார்பில் அனுப்பப்பட்ட எச்சரிக்கை அறிக்கையில் அதாவது ஆபத்தான மேகக்கூட்டங்கள் இருப்பது குறித்த எச்சரிக்கை சென்னைக் கட்டுப்பாட்டு அறைக்கு காலை 10.40மணிக்குத்தான் கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பாகவே விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
நீலிகரி பகுதியில் மோசமான வானிலை நிலவியது, கடும் பனி மூட்டம், குளிர், அடர்ந்த மலைப்பகுதி, காடுகள் போன்றவற்றால் தேடுதல் பணி மிகமிகச் சிரமமாக இருந்தது.
விமானத்தில் இந்தியர்கள், வெளிநாட்டினர், கொலிம்பியா பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் பேராசிரியர் ஆப்ரஹாம் வால்ட் ஆகியோர் இருந்தனர். இந்திய அரசு சார்பில் விருந்தினராக பேராசிரியர் வால்ட் அழைக்கப்பட்டிருந்தார்.
வனப் பாதுகாவலர்கள் விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து அளித்த தகவலைத் தொடர்ந்து ராணுவம் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்தது. அடர்ந்த காடு, யானைகள் அதிகமான நடமாட்டம், காட்டெருமை தொந்தரவு போன்றவற்றுக்கு மத்தியில் மீட்புப்பணி நடந்தது.
விமானத்தின் உடைந்த பாகங்கள், சிதைந்த உடல்கள் ஆகியவை ரங்கசாமி மலைப்பகுதி அருகே டிசம்பர் 19ம் தேதி மீட்கப்பட்டன. இது தொடர்பாக 1950ம் ஆண்டு டிசம்பர் 21ம்தேதி மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் குர்ஷித் லால் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “ மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
விமான விபத்தில் உயிரிழந்த புகழ்பெற்ற புள்ளியியல் வல்லுநர் பேராசிரியர் ஆப்ரஹாம் வால்ட், 2-ம் உலகப் போரில் வெல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தார் என நீலகிரி ஆவணக் காப்பக மையத்தின் இயக்குநர் தர்மலிங்கம் வேணுகோபால் தெரிவித்தார்.
Related Tags :
Next Story